அவளுக்காக...
🫅துணி துவைக்கவும், எனக்கான பணிவிடைகள் செய்யவும் , சமைக்கவும் , என் உடல் தேவைகளை நிறைவேற்றவும் , அவள் அவசியம் தேவை என அவளே நினைத்துக்கொண்டு இருக்கிறாள்...
🫅ஆனால் அவளிடம் என் முக்கிய தேவைகள் அது எதுவுமே அல்ல... மேல் கூறப்பட்டவற்றில் தான், அவள் கர்வம் கொண்டு ,"நான் தான் இத்தனையும் செய்து, உன்னை பார்த்துக்கொள்கிறேன் " என அவளே அவளை நினைத்து பூரிப்பும் கொள்வாள்...சில சமயம் எதிர்மறையான எண்ணங்களில் சிக்கி , "நான் இதற்கு தானே இருக்கிறேன்" என வெறுப்பையும் உமிழ்வாள்...!!
🫅அவள் பிறந்த வீட்டிற்கு சென்று மாதக்கணக்கில் ஆனால் கூட , எனக்கான தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு இறைவன் அழகான சூழலையும் , மனதையும் , உடலையும் கொடுத்துள்ளான்... இதில் அவள் இல்லாமல் நான் வாழ முடியவில்லை , சாப்பிட முடியவில்லை , என் உலகம் இயங்கவில்லை என மற்றவர்கள் போல் , வேதனை பட்டு புலம்பும் வாய்ப்பு எனக்கு கிடைப்பதில்லை .. அதனாலோ என்னவோ நான் அவள் இல்லாமல் மகிழ்ச்சியாக நாட்களை கழிப்பதாக எண்ணம்... இன்னும் சொல்லப்போனால் அவள் இல்லையென்றாலும் நான் மகிழ்வாக தான் இருப்பேனாம்... இன்னும் எனக்கு அவள் தேவை இல்லையாம்.. அதனால் தான், நான் வருத்தமில்லாமல் இருக்கிறேனாம்...!! ஆதலால் அவரே அவரை நொந்து கொள்ளுதல் ஒவ்வொரு முறையும் நடக்கத்தான் செய்கிறது...!!
🫅சில விடயங்களை தெளிவு படுத்த விரும்புகிறேன்...
🫅மனிதர்களை சார்ந்து வாழ்தலில் நமக்கான சில தேவைகளும் , மகிழ்வும் , அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் நமக்கான இன்பமும் கொட்டி கிடக்கிறது.... அதற்காக சார்ந்தே ஒருவர் வாழ வேண்டும் என்று நிர்பந்தம் இல்லை... ஒருவர் இல்லாமல் தன் தேவையை தானே நிறைவேற்றிக்கொள்ளுதல், ஒரு வரம்...! அவர்கள் இருக்கும் போது உதவிகரமாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் உலகத்தை பிடுங்கி நம் பிடியில் வைத்திருப்பதும் தவறு...
🫅என் மனைவி எங்கெல்லாம் செல்ல விரும்புகிறாரோ அவற்றிற்கு , அவரின் ஆர்வத்தை , தேவையை , உணர்வை புரிந்து , தாராளமாக என கதவை திறந்தே வைத்திருப்பது எனது இந்த நிமிடம் வரை உள்ள உணர்வு... ஆனால் இதற்கும் உங்களுக்கு பாசம் இல்லை , அதனால் தான் இப்படி உடனே சரி என ஒப்புதல் அளிக்கிறீர்கள் என மீண்டும் சிறுபிள்ளைத்தனமான கோபம்...
🫅நான் வரமாட்டேன்... எங்கள் ஊருக்கே போறேன், என் அருமை உங்களுக்கு புரிய வேண்டும் , அன்பு புரிய வேண்டும் என அவர்களே என் அன்பை எடைபோட ஏதேதோ சொல்வார்கள் செய்வார்கள்... அதற்கும் அனுமதிப்பதுண்டு... அதிலும் அவர்கள் திருப்திபடும் படி , நான் கவலையில் தோய்ந்து வாழ்வை வாழ இயலாத நிலைக்கு சென்றதில்லை...
🫅சராசரி வட்டத்திற்குள் என் அன்பை எடை போட்டு பார்த்தல் என்பது அவளுக்கு எட்டாகனி... அவள் நினைக்கும் வட்டத்திற்குள் என் அன்பு அடங்க மறுக்கிறது...ஆதலால் அன்பே இல்லை என ஒரு நேரம் வெம்புவாள்... சில நேரங்களில் நல்ல உணர்வுகளை ஏற்கும் போது பிரமிப்பாள்....
🫅இவை அத்தனையும் அவள் எண்ணத்தை பொறுத்தே மாற்றமடைந்து கொண்டே இருக்கும்... நான் அசராமல் அவற்றை பெரும்பாலும் ரசித்துக் கொண்டு இருப்பேன்... சில நேரம் வலிக்கும் ...சில நேரம் என் அன்பை சோதித்து கொண்டே இருக்கிறாளே என பாவப்பட தோன்றும்... சில சமயம் மிக அதிகமாக எதிர்மறை எண்ணத்தில் சிக்கிக்கொண்டால், அவளை தெளிவு படுத்தும் நேரத்தில் என் மனமும் புண்படும்... ஆனாலும் இவை அத்தனையும் அழகான நிகழ்வாக தான் எனக்குள் இருக்குமே தவிர , என்னை பலவீனபடுத்துவது குறைவு....
பெரும்பாலும் மனிதர்கள் பலவீனத்தில் தான் அன்பை உணர்கிறார்கள்.. அழுகையில் , பொறாமையில் , சந்தேகத்தில் , பிடிவாதத்தில் , கட்டுப்பாட்டில் ,செல்ல தொந்தரவுகளில் ... அப்படியே எதிர்மாறாக சுதந்திரம் , விட்டுக்கொடுத்தல் , பொறுத்திருத்தல், நம்பிக்கையில் , என மனம் விசாலமடைந்து இருத்தல் வெகு சிலருக்கு தான்...
🫅அதற்காக அவள் இல்லாவிட்டாள் நான் அழுதே தீர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை .... அவள் அவளாக இருப்பதில் எனக்கு பேரின்பம் தான்... அதே போல என் மனம் சூழலை ஏற்று பக்குவப்படுவதிலும் எந்த தவறும் இல்லை என நினைக்கிறேன்...
🫅அதே போல் தான் அவரின் தனிப்பட்ட முடிவுகளில் நான் , என் விருப்பத்தை திணிக்க விரும்புவதில்லை...இன்னும் சொல்லப்போனால் யாரேனும் கேட்டால் என் பெயரை பயன்படுத்திக்கொள் என்று கூறுவதும் உண்டு...
🫅இணைந்து பயணிப்பதில் சுகம் தான்...தனிமை வந்தால் ஏற்கும் வல்லமையும் வேண்டுமல்லவோ....
🫅நீ இல்லாமல் என்னால் வாழ இயலாது என்ற பலவீனத்தை அடியோடு வெறுப்பவன் நான்... யார் இல்லாவிட்டாலும் உலகம் இயங்கியே தீரும்...!!
No comments:
Post a Comment